நடமாடும் உடல் மசாஜ் சேவைகளை வழங்குவதாக கூறி பேஸ்புக்கில் விளம்பரம் செய்து தம்முடன் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவரை களுத்துறை கடற்கரைக்கு அழைத்து தாக்கி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பேஸ்புக் பக்கத்தில் பெண்களைப் போன்று வேடமணிந்த இவர்கள் தாம் நடமாடும் உடல் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இதன்போது அவர்களுடன் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவரை களுத்துறை கடற்கரைக்கு அழைப்பித்து அவரைக் கடுமையாக தாக்கிய பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.