ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் குகனேஷ்வரன் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து, சுற்றுலா விஸாவின் மூலம் அவர்களை அழைத்து சென்று அவர்களை பலவந்தமாக தொழில்களில் ஈடுபடுத்தியுள்ளதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருடன், குறித்த சந்தேகநபர் நெருக்கிய தொடர்புகளை பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.