காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக ஒரு நிதியத்தை ஸ்தாபிக்க எகிப்தில் இடம்பெற்ற அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவால் இழப்பு மற்றும் சேதங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவியை வழங்குவதற்கு இந்த திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
முன்னதாக பேச்சுவார்த்தையாளர்களிடையே அதிருப்தி இருப்பதாக COP27 இன் எகிப்திய தலைவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் "சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு" அவர்களுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தலுக்கு அமைவாக இணக்கப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எகிப்தில் இடம்பெற்ற உலக நாடுகளின் சந்திப்பு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
கைத்தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ள 1.5C வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இலக்கு நிலைநிறுத்தப்படுமா என்பது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் மில்லியன் கணக்கான மக்களுக்கு அழிவுகரமான காலநிலை தாக்கங்கள் ஏற்பட சாத்தியம் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் வரலாற்று ரீதியாக பெரும் பங்காற்றியதால், பல நூற்றாண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியேற்படும் என்ற அச்சத்தில், செல்வந்த நாடுகள் 30 ஆண்டுகளாக நிதியுதவி பற்றிய விவாதத்தை எதிர்த்தன.
ஆனால், அண்மைய ஆண்டுகளில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கங்கள் சமநிலையை குறைத்துள்ளன.
இந்த நிலைமையே உயர்ந்து செல்லும் வெப்பநிலையால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து செல்வந்த நாடுகள் இறுதி பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான ஏதுநிலையை ஏற்படுத்தியுள்ளன.