நாட்டில் நடக்கும் பல சம்பவங்கள், இலங்கை பொலிஸ் படை சீரழிந்துள்ளமையை எடுத்துக் காட்டுகிறது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அதிகாரம் உள்ளவர்களின் தோல்வியாலும், அலட்சியப் போக்கினாலும் இதுபோன்ற பொலிஸாரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்கின்றன என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிஸார் கையாடண்ட விதம் மற்றும் இரண்டாவது சம்பவமாக, பெண் கான்ஸ்டபிளின் கழுத்தில் உயர் அதிகாரியொருவர் கைவைத்தமை குறித்து வெளியான படங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாவது சம்பவமாக, தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருக்காமையால் தன்னுடைய நண்பர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தனக்கு அறிவித்ததாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு அலட்சியப் போக்கு காரணம் என்றும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.