(எம்.வை.எம்.சியாம்)
மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்றரை வயது குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
அயலவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த குடும்பத்துக்கும் சந்தேக நபரின் குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த பயன்படுத்திய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.