Our Feeds


Tuesday, November 22, 2022

ShortNews Admin

அரசியல் ரீதியில் முரண்படாமல் பஜ்ஜட்டுக்கு ஆதரவு தாருங்கள் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ



(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரமடைந்துள்ளன. முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் செயல்படுகின்றன. அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்து முரண்பட்டுக் கொண்டால், கொள்கையற்ற நாடு மாத்திரமே மிகுதியாகும். 

ஆகவே வரவு செலவுத் திட்டத்திற்கு அனைவரும் திருத்தங்களுடன் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் சாதகமான பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.புதிய பொருளாதார திட்டங்களை நிதியமைச்சர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார்.

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.பூகோள பொருளாதாரம் மற்றும் அரசியல் நடப்பு நிலைவரங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

சிறந்த திட்டங்களுக்கு அமைய செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை சுபீட்சமானதாக நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.ஆகவே திருத்தங்களுக்கு அமைய அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என குறிப்பிடுபவர்கள் குறுகிய நிலைக்குள் இருந்துக் கொண்டு செயற்படாமல் கடந்த காலங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றது.தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கடன் பெற்றுக் கொண்டது. இது பாராளுமன்றமும், நாட்டு மக்களும் அறியாத விடயமல்ல,பொருளாதார பாதிப்புக்கு தற்போது தீர்வு காண ஆலோசனை குறிப்பிடுபவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்ததை மறந்து விட்டார்கள்.

சவால்களை பொறுப்பேற்குமாறு குறிப்பிடும் போது அதனை ஏற்க மறுத்தவர்கள் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.வீரவசனம் குறிப்பிடுபவர்களால் எவ்வித பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது,எம்மால் வீரவசனம் மாத்திரம் பேசிக் கொண்டு இருக்க முடியாது.சவால்களை பொறுப்பேற்பது எமது கொள்கையாகும்,சவால்களை கண்டு ஒருபோதும் அஞ்சு ஓடவில்லை.

கடன் சுமையால் நெருக்கடியாகிய நாட்டையே பொறுப்பேற்றோம். நாட்டை முன்னேற்ற பாதையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்,ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்,கொவிட் பெருந்தொற்று தாக்கம் ஆகியவற்றை கடினமான முறையில் முகாமைத்துவம் செய்தோம்.மக்கள் எதிர்கொண்ட நெருக்கடியை ஒரு தரப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்,ஆகவே நாட்டு மக்களை குறை கூற முடியாது.

தவறான தீர்மானங்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவதால் பயன் ஏதும் கிடைக்கப் பெறாது.அரசாங்கத்தின் நாளாந்த செயற்பாடுகளையும் நிறைவேற்ற அரசாங்கம் கடன் பெறும் நிலை ஏற்பட்டது.பெற்றுக் கொண்ட கடன் அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி,ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்றது.

அரச கடன்களை மறுசீரமைத்து வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துக் கொள்ள வேண்டும்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கண்ணீர்,துயரத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் விவசாயத்துறையை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளின் கருத்துகளுக்கு செவிசாய்த்து செயற்பட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.பொருளாதார பாதிப்புக்களுக்கு மத்தியில் தேசிய வளங்களை விற்கும் கொள்கை எமக்கு கிடையாது.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.நாட்டின் பாதுகாப்பு அனைத்து துறைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும்.தேசிய பொருளாதாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது.

 சுகாதாரம்,கல்வி ஆகிய துறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த மாதங்களில் காணப்பட்ட நெருக்கடியை தீவிரப்படுத்தியது யார் என்பதை நாட்டு மக்கள் தற்போது அறிந்துக் கொண்டுள்ளார்கள். 

எதிர்வரும் காலங்களில் மக்கள் பல விடயங்களை அறிந்துக் கொள்வார்கள்.நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதை தடுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் இதனை நன்கு அறிவார்கள் அவர்களுக்கு வெட்கமில்லை.மீண்டும் எம்மை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக முரண்பட்டுக் கொள்ளாமல் அரசாங்கம் மாறும் போது மாற்றமடையாத அரச கொள்கையை செயற்படுத்துவது அவசியமாகும்.விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் கொள்கையற்ற நாடு மாத்திரமே மிகுதியாகும்.நாட்டில் சர்வதேசத்தின் தலையீடு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் நோக்கமே கடந்த மாதங்களில் செயற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் வீழ்த்தப்பட்டது.

நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கும்,தற்போதைய நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »