கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் சீதவாக்கை பிரதேச சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி, கடந்த வெள்ளிக்கிழமை (11) அவர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்.
பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ரங்கே பண்டார, பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தம்மிடமோ அல்லது கட்சியினரிடமோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தமது கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு கட்சி என்ற வகையில் நிதியமைச்சின் எந்தவொரு இராஜதந்திர தலையீடுகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபடாது என்றும் ரங்கே பண்டார கூறினார்.
கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்று தெரிவித்த அவர், பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றார்.