(எம்.மனோசித்ரா)
பால் இறக்குமதியாளர்களினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை (நவ.28) தனக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தம்மால் இறக்குமதி செய்யப்பட்ட 4 இலட்சம் கிலோ கிராம் பால்மா தொகை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அவை காலாவதியாகும் நிலையிலுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விரைவில் மீண்டும் பால்மா தட்டுப்பாடு ஏற்படும் என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி,
பால்மா இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம்.
நான் இது தொடர்பில் ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களத்திடம் விளக்கம் கோரியுள்ளேன்.
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே இவ்விரு திணைக்களங்களும் செயற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பான முழுமையான அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.