Our Feeds


Tuesday, November 22, 2022

ShortNews Admin

ஓமானில் இலங்கை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தல் : 45 பெண்கள் வாக்கு மூலம் : பாதுகாப்பு இல்லத்தில் 90 பெண்கள் தங்கவைப்பு : மேலும் 8 உப முகவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை




(எம்.எப்.எம்.பஸீர்)


வேலை பெற்றுத் தருவதாக கூறி, இலங்கையிலிருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று ஓமானில் விபசார  நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் பெண் உட்பட 8 பேர் இன்று (21) கைது குற்றவியல் புலனாய்வு பிரிவில் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபராக கருதப்படும் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த பெண் உட்பட 8 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணையின் போது, குறித்த பெண்  வழங்கிய 04 முகவரிகளிலும் அவர் வசிக்காமல், தலைமறைவாக இருந்த நிலையில், அவரைக் கைது செய்ய தேடுதல்கள் நடாத்தப்பட்டு வந்தன. 

இதற்கு முன்னர் இவ்விவகாரத்தில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 19 ஆம் திகதி, ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் இன்சாப் எனும் வத்தளை மற்றும் தெஹிவளை பகுதிகளை சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பதில் நீதிவான்  பிரியமால் அமரசிங்க உத்தரவிட்டிருந்தார்.  

விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கலுக்கு அமைய, ஏற்கனவே பெறப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்தேகநபர், ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில்,  இந்த கடத்தலுடன் தொடர்புடைய  தரகர்களில் ஒருவராக செயற்பட்டதாக கூறப்படும்  அவிசாவளை - புவக்பிட்டியவைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் குகனேஷ்வரன் என்பவரையும் குற்றவியல் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

அவரை நேற்று (20) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்  விசாரணையாளர்கள் ஆஜர் செய்த நிலையில், அவர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே, இன்று (21) சரணடைந்த பின்னர் ஆஷா திஸாநாயக்க எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பெண்களை ஓமானில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் திட்டமிட்ட நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விஷேட விசாரணைகள் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் அதன் பணிப்பஆளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. எம். சமரகோன் பண்டா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அரச உளவுச் சேவை, சி.ஐ.டி. மற்றும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரர் அடங்கிய சிறப்புக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் பண்டா தலைமையில் கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி ஓமான் சென்று விசாரணைகளுக்கான வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது.  

சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட  சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை அந்த விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ள்ளான  45 பெண்களின் வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் பண்டா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை  நடாத்தியுள்ளனர். தற்போது குறித்த ' சுரக்ஷா' எனும் அந்த பாதுகாப்பு இல்லத்தில் 90 பெண்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விசாரணைகளில்,  தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களை விட மேலும் 8 உப முகவர்களைக் கைது செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. 

ஓமானில் உள்ள இலங்கை தரகர்கள் 7 பேர், இந் நாட்டில் உள்ள 15 தரகர்கள்,  டுபாயில்  இருக்கும்  இலங்கை தரகர்கள் 7 பேர் குறித்தும் அவதானம்

இதனைவிட,  ஓமானில் உள்ள இலங்கை தரகர்கள் 7 பேர், இந் நாட்டில் உள்ள 15 தரகர்கள்,  டுபாயில்  இருக்கும்  இலங்கை தரகர்கள் 7 பேர் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ள விசாரணையாளர்ட்கள் அவர்களை விசாரணை வலயத்துக்குள் வைத்துக்கொண்டு மேலதிக விசாரணைகளை தொடர்வதாக  விசாரணைத் தகவல்கள் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »