வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள கடலில் விபத்தில் சிக்கி தற்போது வியட்நாமில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிரச்சினையை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியன்மார் கொடியுடனான LADY R3 என்ற மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது
வியட்நாமில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக வியட்நாமிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் விபத்துக்குள்ளான கப்பலுக்கு அண்மையில் பயணித்த ஜப்பானிய சரக்குக் கப்பலான ஹீலியோஸ் லீடரால் அக்கப்பலில் பயணித்தவர்கள் மீட்கப்பட்டனர்.
பின்னர், வியட்நாமில் உள்ள வங் டாவு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வியட்நாம் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது வியட்நாமில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.