(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.
அதிகார பகிர்வு சாத்தியமற்றது என்பதை உறுதியாக குறிப்பிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சமர் வீரசேகர தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிம் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர,தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார பாதிப்பு குறித்து அவதானம் செலுத்தவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் கோரவில்லை,இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஊரடங்கு சட்டத்தை பிரயோகித்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்டன.ஆனால் வழங்கப்பட்ட அரசியல் உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடும் வகையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு எதிராக செயற்படவில்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளினால் அவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாமல் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.அரசியல் உரிமை என குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியை இவர்கள் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.
வடக்கு மாகாண இளைஞர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அரசியல் தீர்வுக்கான மதிப்பு இல்லாமல் போகும் என குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பிற நாடுகளில் உயர் கல்வியை கற்கிறார்கள்.சுகபோகமாக வாழ்கிறார்கள்.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளார்கள்.இதுவே உண்மை.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளோம்.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.அதிகார பகிர்வு என்ற சொற்பதத்தின் ஊடாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மலினப்படுத்த முடியாது.
அதிகார பகிர்வு சாத்தியமற்றது,மாவட்டங்களுக்கான அதிகாரங்களை விஸ்தரிக்கலாம் .ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.அதிகார பகிர்வு என்ற இலக்கை அடைவதற்காக பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தப்பட்டு,அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தற்போது செயற்பாட்டில் உள்ள போது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை எவ்வாறு வலுவற்றதாகும்,ஆகவே மக்கள் வழங்கிய ஆணையை மதித்து அரச தலைவர்கள் செயற்பட வேண்டும்.
அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன்.நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பேன்.எதிர்வரும் நாட்களில் ஒன்றுப்பட்ட சக்தியாக இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என்றார்.