சர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப் போட்டி என வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் கனடா முதல் தடவையாக உலக சம்பியனாகி வரலாறு படைத்தது.
டேவிஸ் கிண்ணத்தை 28 தடவைகள் வென்றெடுத்த அவுஸ்திரேலியவை வீழ்த்தி கனடா உலக சம்பியனானமை குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயமாகும்.
ஸ்பெய்னில் உள்ள மலாகா டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு டெவிஸ் கிண்ணத்தை கனடா சுவீகரித்தது.
இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள், ஒரு இருட்டையர் ஆட்டம் என 3 ஆட்டங்களைக் கொண்ட இறுதிப் போட்டியில் முதலிரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் கனடா வெற்றிபெற்றதால் இரட்டையர் ஆட்டத்திற்கு அவசியம் ஏற்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான டேவிஸ் கிண்ண இறுதிச் சுற்றில் 8 நாடுகள் பங்குபற்றின. ஒரு கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் ஒரு அரை இறுதியில் இத்தாலியை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் கனடா வெற்றிகொண்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு கால் இறுதியில் நெதர்லாந்தை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் ஒரு அரை இறுதியில் குரோஏஷியாவை 2 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாட குதிபெற்றது.
இப் போட்டியில் ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்குபற்றியதுடன் அவை முறையே குரோஏஷியா, இத்தாலி ஆகிய நாடுகளிடம் தோல்வி அடைந்த கால் இறுதியுடன் வெளியேறின.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் தனாசி கொக்கினாக்கிஸை 6 - 2, 6 - 4 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் கனடாவின் டெனிஸ் ஷாப்போவாலவ் வெற்றிகொண்டு கனடாவை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இட்டார்.
உலக தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை 2ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் எதிர்த்தாடிய கனடாவின் ஃபீலிக்ஸ் ஓகர் அலியாசிமே 6 - 3, 6 - 4 என்ற புள்ளிகளைக் கொண்ட நேர் செட்களில் வெற்றிபெற்று கனடா முதல் தடவையாக டேவிஸ் கிண்ணத்தை சுவீகரிப்பதை உறுதி செய்தார்.
கனடா சம்பியனானது அதன் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டேவிஸ் கிண்ண தகுதிகாண் சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்த கனடா இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்திருந்தது.
எனினும் யூக்ரெய்ன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ரஷ்யாவுக்கும் பெலாரஸுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து 'வைல்ட் கார்ட்' முறையில் இரண்டாம் சுற்றில் பங்குபற்ற கனடா தகுதிபெற்றது. இரண்டாம் சுற்றில் பி குழுவில் ஸ்பெய்னுக்கு அடுத்ததாக 2ஆம் இடத்தைப் பெற்ற கனடா இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற கால் இறுதியில் ஜெர்மனியையும் அரை இறுதியில் இத்தாலியையும் வெற்றிகொண்ட கனடா, இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை வீழ்த்தி சம்பியனானது.