Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

விமானப் பயணிகள் 22 கரட்டிற்கும் அதிகமான தரத்தைக் கொண்ட தங்கத்தை அணியத் தடை - நிதி இராஜாங்க அமைச்சர்



(எம்.மனோசித்ரா)


சட்ட விரோத தங்கக் கடத்தலை முற்றாகக் இல்லாமலாக்குவதை இலக்காகக் கொண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதியின்றி, விமானப் பயணிகள் 22 கரட்டுக்கும் அதிக தரத்தைக்கொண்ட தங்கத்தை அணிவதை தடை செய்வதற்கான வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அநாவசியமாக தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு , அவற்றை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு , விமானப் பயணிகளைப் போன்று வருகை தருபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதியின்றி 22 கரட்டுக்கும் அதிக தரத்தைக்கொண்ட தங்கத்தை அணிந்து கொண்டு விமானப்பயணிகளாக வருகை தருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. 

தங்க ஆபரணங்களின் நிலைமை மற்றும் பெறுமதி தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தொழிநுட்ப முறைமையைப் பயன்படுத்துவதற்கு சுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும். வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் தொழிலாளர்கள் அல்லது சாதாரண விமான பயணிகளுக்கு இதனால் எவ்வித அசௌகரியமும் ஏற்படாது. 

விமானப்பயணிகள் அணிந்து வரும் தங்க ஆபரணங்களுக்கான தரமோ அல்லது வரையறையோ விதிக்கப்படாமையை பயன்படுத்தி , நாளாந்தம் சுமார் 50 கிலோ தங்கம் வர்த்தகர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சில வர்த்தகர்கள் நாளாந்தம் அருகிலுள்ள நாடுகளிலிருந்து விமானத்தில் பயணித்து 24 கரட் தங்கத்தை அணிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாதாந்தம் சுமார் 30 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படுகிறது. 

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுங்க ஆணையாளர் நாயகத்திற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய குறித்த அறிக்கை கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பில் மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »