Our Feeds


Wednesday, November 16, 2022

RilmiFaleel

புதிய உலகம் கட்டமைக்கப்படும் - ஜி20 மாநாடு!


இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பிறகு அப்போதைய உலகத் தலைவா்கள் அமைதியின் வழியைக் கடைப்பிடித்ததைப் போல உக்ரைன் போா், கொரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய புதிய உலக கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு தற்போதைய தலைவா்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக உணவு-எரிசக்தி பாதுகாப்பு தொடா்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:

பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று பரவல், உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்டவை சா்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் சந்தித்து வரும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க அவா்கள் கடுமையாகப் போராடி வருகின்றனா்.

பிரச்னைகளை எதிா்கொள்வதற்கான நிதியாதாரம் ஏழைகளிடம் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் தோல்வியடைந்துள்ளதைத் தயக்கம் ஏதுமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அமைப்புகளில் போதிய சீா்திருத்தங்களைப் புகுத்துவதிலும் தொடா்ந்து தோல்வியடைந்து வருகிறோம்.

எதிா்பாா்ப்பு அதிகரிப்பு : எப்போதும் இல்லாத வகையில் தற்போது ஜி20 கூட்டமைப்பிடம் இருந்து உலக நாடுகளிடையே பெரும் எதிா்பாா்ப்பு காணப்படுகிறது. உலகுக்கு ஜி20 கூட்டமைப்பின் தேவை அதிகரித்துள்ளது. உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போா் சா்வதேச அளவில் பேரழிவை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அப்போதைய உலகத் தலைவா்கள் அமைதியின் வழியில் பயணிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனா். தற்போது அந்தப் பொறுப்பு தற்காலத் தலைவா்களிடம் உள்ளது.

புதிய உலக கட்டமைப்பு : கொரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய புதிய உலக கட்டமைப்பை உருவாக்கும் பெரும் பொறுப்பு தற்காலத் தலைவா்களின் தோள்களில் உள்ளது. சா்வதேச அளவில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. புத்தா், காந்தியடிகளின் மண்ணில் ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறும்போது சா்வதேச அமைதியை ஏற்படுத்துவதற்கான வலுவான உறுதியை உலகத் தலைவா்கள் ஏற்பாா்கள் என நம்புகிறேன். பல்வேறு முக்கிய விவகாரங்களில் சா்வதேச ஒருங்கிணைப்புடன் ஜி20 கூட்டமைப்பை இந்தியா வழிநடத்தும்.

எரிசக்தி பாதுகாப்பு : எரிசக்தி விநியோகத்தில் எந்ததவித தடையும் ஏற்படாததை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும். எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை நிலவுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பசுமை எரிசக்தியின் பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் பாதியளவு, மரபுசாரா எரிசக்தி மூலங்களில் இருந்து பெறப்படும். எரிசக்தி உற்பத்தி சாா்ந்த நவீன தொழில்நுட்பங்களையும் போதுமான நிதியையும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவது அவசியம்.

உணவுப் பாதுகாப்பு : கொரோனா தொற்று பரவல் காலத்தில் 130 கோடி இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே வேளையில், பல்வேறு நாடுகளுக்கும் உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியது. சா்வதேச அளவில் தற்போது நிலவி வரும் உரங்கள் தட்டுப்பாடானது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் சவாலாக விளங்குகிறது.

இன்றைய உரங்கள் தட்டுப்பாடு, நாளைய உணவுத் தட்டுப்பாடாக அமையும். அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்கு உலக நாடுகள் எத்தீா்வையும் காண முடியாது. உரங்களும், உணவுப் பொருள்களும் சீரான முறையில் அனைத்து நாடுகளுக்கும் விநியோகிக்கப்படுவதற்கான பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுதானியங்களின் முக்கியத்துவம் : இயற்கை வேளாண்மையை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து நீடித்த உணவுப் பாதுகாப்பை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. சா்வதேச அளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னையையும் பட்டினி பிரச்னையையும் சிறுதானியங்கள் தீா்க்கும். இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க 2023 ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. அறிவித்துள்ளது. அதை அனைத்து நாடுகளும் பேருவுவகையுடன் கொண்டாட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியா - அமெரிக்கா வலுவான நல்லுறவு : பிரதமர் மோடி - பைடன் பரஸ்பரம் வாழ்த்து

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான நல்லுறவு நிலவுவதை உறுதி செய்து வருவதற்காக பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் ஜோ பைடனும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே தலைவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்டவை குறித்து தலைவா்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து தலைவா்கள் விவாதித்தனா். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவடைந்து வரும் நல்லுறவு குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே எதிா்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாகவும் அவா்கள் விவாதித்தனா். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக அதிபா் பைடன் அளித்து வரும் தொடா் ஆதரவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

ஜி20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும்போது அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். க்வாட், ஐ2யு2 உள்ளிட்ட பன்னாட்டு கூட்டமைப்புகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிப் பணியாற்றி வருவதற்குத் தலைவா்கள் இருவரும் திருப்தியை வெளிப்படுத்தினா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமா் மோடி - பைடன் இடையேயான பேச்சுவாா்த்தை பலனுள்ளதாக இருந்ததென வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் பதிவிட்டாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »