அமெரிக்காவில் நீண்ட காலம் தங்கியிருந்து
கடந்த காலங்களில் அமைதியான அரசியல் நடைமுறையை கடைப்பிடித்து வந்த பெசில் ராஜபக்ச எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்துள்ள கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, பெசில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு புறம்பாக தீர்மானங்களை எடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதியுடன் அவ்வப்போது செய்திகளை பரிமாறிக்கொண்ட பெசில் ராஜபக்ஷ, அமைச்சரவை மாற்றம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளார்.
எனினும், அமைச்சரவை மாற்றம் விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதே பெசில் ராஜபக்ஷவின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.