ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோது கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்சியின் கொள்கைகள், தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாதென இங்கு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த காலங்களில் அவ்வாறு செயற்பட்டவர்களில் பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் ஆகிய எம்.பிக்கள் மன்னிப்பு கடிதத்தை வழங்கியிருப்பதால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஹரிஸ் எம்.பி இன்னமும் மன்னிப்புக் கடிதத்தை வழங்காத காரணத்தினால் அவர் அதனை வழங்கும்வரை கட்சியில் மீண்டும் இணைப்பதில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கமைய பைசல் காசிம் கட்சியின் பொருளாளராகவும், தௌபீக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் கட்சியின் நாளைய பேராளர் மாநாட்டில் நியமிக்கப்படலாமென தெரிகிறது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஹாபீஸ் நஸீர் எம்.பியின் பிரதித் தலைவர் பதவியில் அலி ஸாஹிர் மௌலானாவும், மற்றுமொரு பிரதித் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.பி எம்.ஐ. மன்சூரும் நியமிக்கப்படவுள்ளனர். பிரதி அமைப்பாளர் பதவியில் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கபபடவுள்ளார்.
-தமிழன்