Our Feeds


Tuesday, November 8, 2022

ShortNews Admin

மூழ்கிய கப்பலில் இருந்து இலங்கையை சேர்ந்த 19 பெண்கள் 20 சிறுவர்கள் உட்பட 303 பேர் உயிருடன் மீட்க்கப்பட்டு வியட்னாமுக்கு அனுப்பி வைப்பு - VIDEO



இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த  மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்த அகதிகள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று (08) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கப்பலில் இருந்த 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 சிறுவர்கள் உட்பட 303 இலங்கையர்களும் சீரான  உடல்நிலையில் இருப்பதாகவும் வியட்நாமின் ஹீலியோஸ் லீடருக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
  
படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர், தாம் பிரச்சினையில் சிக்கியிருப்பதாக கடற்படையை தொடர்பு கொண்டு அறிவித்ததாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து,  கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அதற்கமைய படகிலிருந்தவர்களை மீட்டு வியட்நாம் நோக்கி கொண்டு செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர் என்று கடற்படை தெரிவித்தது.

படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வியட்நாமை இன்று (08) சென்றடைந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள், கனடா நோக்கி பயணமான இலங்கைத் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »