Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

VIDEO: நாமலின் மாமனாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 170 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது ? - ஹேஷா விதானகே கேள்வி



(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)


உதைப்பந்தாட்ட போட்டியை நடத்துவதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மாமனாரின்  நிறுவனத்திற்கு 170 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிதிக்கு இதுவரை என்னாயிற்று என்பது தொடர்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் அமைச்சராக பதவியேற்றபோது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்தில் ஏதேனும் முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்,ஆனால் விரல் நீட்டி சுட்டிக்காட்டும் அளவிற்கு கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேறத்திற்கு பதிலாக என்ன நேர்ந்துள்ளது என்பதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நன்கு அறிவார்.

அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில உயர் அரச சேவை அதிகாரிகள் செய்த மோசடியினால் நாட்டு மக்கள் ஒருவேளை உணவை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தினால் நாட்டு மக்கள் இனிவரும் காலங்களிலாவது பாராளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளை தெரிவு செய்யாமல் இருப்பார்கள்.

விளையாட்டுத்துறையில் கிரிக்கெட்டு விளையாட்டு குறித்து மாத்திரம் பேசப்படுகிறது. உலக தரப்படுத்தலுக்கமைய இலங்கையின் உதைப்பந்தாட்ட விளையாட்டுத்துறை 207 ஆவது நிலையில் உள்ளது.

இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்டுள்ள தீவு நாடுகள் கூட இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.

உதைப்பந்தாட்டத்திற்காக கடந்த காலங்களில் விளையாட்டுத்துறை அமைச்சில் ஒருசில விடயங்கள் இடம்பெற்றுள்ளன. 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின்  தலைவராக ஜஸ்வர் என்பவர்  வாக்கெடுப்பு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டார்.

இவரது பதவி காலம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டது,அதன் பின்னர் செப்டெம்பர் மாதம் வரை மீண்டும் நீடிக்கப்பட்டது.

இலங்கையின் உதைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளம் நிதியுதவி வழங்கியுள்ளது.உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பிற தரப்பினரது ஆதரவு இல்லாமல் சம்மேளனத்தின் நிதி குழுவின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் உதைப்பந்தாட்ட போட்டியை நடத்துவதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மாமனாரின்  நிறுவனத்திற்கு 170 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த நிதிக்கு இதுவரை என்னாயிற்று என்பது தொடர்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

'விளையாட்டுத்துறை அமைச்சு முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு அமைச்சின் தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. ஆகவே விளையாட்டுத்துறை அமைச்சு முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »