எட்டாவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 12 ஆண்டுகளின் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
சம்பியனை தீர்மானிக்கின்ற மாபெரும் இறுதிப்போட்டி இன்றைய தினம் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.
அதன்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ஓட்டங்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்நது களமிறங்கிய மொகமட் ஹரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ஓட்டங்களைக் குவித்த பாபர் அசாம் 32 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து வந்த இப்திகார் அகமட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.
பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 121 இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். , அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 138 ஓட்டங்கள் பெற்றால் டி20 உலகக்கிண்ணத்தை வெல்லலாம் என்ற நோக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த வகையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டுக்கான எட்டாவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் தலா ஒரு தடவை சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளாகும். பாகிஸ்தான் 2009ஆம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை கைப்பற்றியதையடுத்து இங்கிலாந்து அல்லது பாகிஸ்தான், இவற்றில் ஏதேனும் ஓர் அணி இரண்டாவது அணியாக இரு உலகக்கிண்ணங்களைக் கைப்பற்றவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையில் இதுவரையில் நடைபெற்றுள்ள இருபதுக்கு 20 போட்டிகளில் 17 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றிருக்கிறது.
இரு அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ண மோதலில் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.