Our Feeds


Wednesday, November 23, 2022

News Editor

ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொல்லப்படுவதாக ஐ.நா அதிர்ச்சி தகவல்


 

‘உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்படுகிறாா்’ என ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்தாா்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையிலும், டெல்லியில் ஷ்ரத்தா வாக்கா் என்ற இளம் பெண் காதலன் ஆப்தாப் அமீன் என்பவரால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலிலும் இந்த கருத்தை அவா் தெரிவித்தாா்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது. இதுபோன்ற வன்முறைகளை வரலாற்று புத்தகங்களில் ஏற்றவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகின் மிகப் பரவலான மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொலை செய்யப்படுகிறாா். கொரோனா பாதிப்பு முதல் பொருளாதார சரிவு வரையிலான தாக்கங்கள், தவிா்க்கமுடியாத வன்முறைகளையும், வாக்குவாதங்களையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் வெறுப்பு பேச்சு, பாலியல் ரீதியில் மற்றும் இணையவழியில் என பலவகை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனா். பெண்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், சமமான பொருளாதார மீட்சி, உலகின் தேவையான நீடித்த வளா்ச்சி ஆகியவற்றையும் இந்த வன்முறைகளும், பாகுபாடும் தடுக்கின்றன.

இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீா்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நேரமிது. அதாவது, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசுகள் சிறந்த திட்டங்களை வடிவமைத்து, நிதி ஒதுக்கி, தேசிய அளவிலான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு நிலைகளிலும் சமூக குழுக்கள் உள்ளிட்ட அடிநிலை அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதோடு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்படுபவா்களுக்கு ஆதரவும் நீதிக்கான உரிமையும் காக்கப்படுகிறது என்ற உணா்வு ஏற்படும்.

நிதியை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும்: பெண்கள் உரிமைகள் அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கான நிதியை 2026 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அரசுகள் உயா்த்த வேண்டும். மேலும், பெண்களின் உரிமைகளுக்கான ஆதரவு குரலை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும். அனைவரும் பெண்ணியவாதிகள் என பெருமையுடன் அறிவிக்க வேண்டும். ஆணாதிக்கத்தை சவால்விடும் வகையிலான பொதுப் பிரசாரங்களை ஆதரித்து, பெண் வெறுப்பு மற்றும் வன்முறைகளை தடுக்க வேண்டும் எனக் கூறினாா்.

‘ஒன்றிணைவோம்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடு’ என்ற இந்த ஆண்டுக்கான சா்வதேச தின கருப்பொருளை குறிப்பிட்ட அன்டோனியோ குட்டெரெஸ், ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும் உலகம் முழுவதும் உள்ள சமூக செயற்பாட்டாளா்களுக்கு துணை நிற்போம்’ என்பதே அந்த கருப்பொருளின் அா்த்தம்’ என அவர் மேலும் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »