ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து அமேசன் நிறுவனமும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தி நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில காலாண்டுகளில் இலாபம் இல்லாததன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தவும் அமேசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், இந்த வாரம் முதல் அந்த நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10,000-ஆக உள்ளதால், அது அமேசன் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் எனவும், உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக்கொண்ட அமேசன் நிறுவனத்திற்கு, அதன் பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான இழப்பாகவே இந்த பணிநீக்கம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அமேசனின் சாதனங்கள் பிரிவு, குரல் உதவியாளர் ‘அலெக்சா’ மற்றும் அதன் சில்லறை மற்றும் மனித வளப் பிரிவு ஆகியவற்றில் பணிநீக்கங்கள் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
அத்தோடு அமேசன் ஒரு மாத கால மதிப்பாய்வுக்குப் பிறகு, சில இலாபமில்லாத பிரிவுகளில் உள்ள ஊழியர்களை நிறுவனத்திற்குள் மற்ற வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.