சவூதியில் கடந்த 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐநா சபையின் மனித உரிமை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
உலகில் மரண தண்டனையை தீவிரமாக செயல்படுத்தும் அரசுகளில் முதன்மையானது சவூதி அரேபியா.
அந்நாட்டில் நிகழ்த்தப்படும் மரண தண்டனைக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சவூதியில் கடந்த 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐநா சபையின் மனித உரிமை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
இதில் 15 பேர் போதை பொருள் பயன்பாட்டிற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தண்டனைக்கு ஆளானவர்களில் சவுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மூவர், ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் இருவர், சிரியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளுக்கு தந்த வாக்குறுதிகளை மீறி சவுதி அரேபியா மரண தண்டனையை தொடர்ந்து அதிக அளவில் நிறைவேற்றி வருகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 139 பேருக்கு சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
2021இல் இந்த எண்ணிக்கை 69ஆக இருந்தது. கோவிட் பெருந்தொற்று தொடங்கிய 2020இல் 27 பேருக்கும், அதற்கு முந்தைய ஆண்டான 2019இல் 187 பேருக்கும் சவூதி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வரும் இந்த வேளையில், சவுதி அரசு மனிதத் தன்மை இல்லாமல் கொடூரமான தண்டனையை வேகமாக நிறைவேற்றி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.