இஸ்லாம் பாடப் புத்தகத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்காக மாணவர்களிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட்ட பாடப் புத்தங்களில் திருத்தங்களை மேற்கொண்டு 2023ஆம் ஆண்டுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று (18) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கேட்ட இடையீட்டு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இஷாக் ரஹ்மான் எம்.பி. தெரிவிக்கையில், அரசாங்க பாடசாலைகளில் 2021-2022 கல்வி ஆண்டுக்காக தரம் 6 முதல் 11வரை மாணவர்களுக்கு இஸ்லாம் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டடிருந்தன. எனினும் நாட்டில் இனவாதம், மதவாதத்தை குழப்பி, இஸ்லாம் பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தங்கள் மீளப்பெறப்பட்டன.
எனினும் அந்த மாணவர்களுக்கு இதுவரை அந்தப் புத்தங்கள் மீள பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தை கற்றுக் கொள்ளும் உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால் இந்த புத்தகங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், 6ஆம் ஆண்டு தொடக்கம் 11ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு இஸ்லாம் பாடப் புத்தங்கள் விநியோகிக்ப்பட்ட பின்னர், அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அந்த மாணவர்களுக்கு பாடப் புத்தகம் கிடைக்கவில்லை என தெரிவித்து குறிப்பிட்ட ஓர் அமைப்பு எனக்கு தபால் மூலம் அறிவித்திருந்தது. கடந்த வாரமே எனக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனவே 2023இல் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும்போது, திருத்தம் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை செய்து அனைத்து மாணவர்களுக்கும் இஸ்லாம் பாடப் புத்தங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாமதாகி இருக்கும் இஸ்லாம் பாடப் புத்தங்களையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.