பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,
தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் பெண்ணொருவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, போதை பானத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாந்திரீகம் செய்ய விரும்புவதாக கூறியதையடுத்து சந்தேக நபருக்கு அந்த பெண்ணின் தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது.
குறித்த பெண்ணை பூஜை ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறிவிட்டு சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், கும்புக்கெட்டே பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இது தொடர்பான பூஜையை நடத்த சந்தேகநபர் திட்டமிட்டு பெண்ணை அவிசாவளை பகுதிக்கு வருமாறு கூறி பெண்ணை தேவாலயம் அமைந்துள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான பூஜையில் மற்றவர்கள் பங்கேற்பார்கள் என்றும், இரவு வெகுநேரமாகியும் வேறு யாரும் வராததால், தான் செல்வதாக கூறி அப்பெண் குடிக்க தண்ணீர் கேட்டபோது, சந்தேககநபர் போதை கலந்த பானத்தை வழங்கியுள்ளதாகவும், இதை அருந்தியுள்ள பெண் மயக்கத்தில் உறங்கிவிட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொஸ்கம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் மாதவ விஜேசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.