(எம்.எப்.எம்.பஸீர்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருடன் சிரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ஹஷான் ஜீவந்த குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) அவர் தங்காலை தடுப்பு முகாமிலிருந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தங்காலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தடுப்புக் காவலில் முன்னெடுத்த விசாரணைகளில் ஹஷான் ஜீவந்த குணதிலகவுக்கு எதிராக எந்த சாட்சியங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்த நிலையில் அவரது தடுப்புக் காவலை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தனர்.
இதனையடுத்தே அவரை முற்றாக விடுதலை செய்து நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி கடந்த 50 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த ஹஷான் ஜீவந்த குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி அளித்த நிலையிலேயே, அவர்கள் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.