எல்ல ஊவா கிரீன்லாந்து தோட்டத்தில் அமைந்துள்ள சின்ன
சிவனொளிபாத மலைத்தொடரில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான செந்தாகட்டி முருகன் ஆலயம் எல்ல பிரதேசசபை அதிகாரிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த பிரதேசமாக சின்ன சிவனொளிபாத மலை காணப்படுகின்றது. இந்த மலைத் தொடரில் அமையப் பெற்றிருந்த செந்தாகட்டி முருகன் ஆலயம் கடந்த செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது பிரதேச மக்களை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பிரதேச மக்கள் சேதமாக்கப்பட்டிருக்கும் முருகன் ஆலயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தில் வாழ்ந்த முன்னோர்களால் குறித்த முருகன் ஆலயத்தில் நூறு வருடங்களுக்கு முன்பிருந்து வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளது. 1933ஆம் ஆண்டு முருகன் திருஉருவச்சிலையுடன் கூடிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் சிலை சேதமாக்கப்பட்டு, ஆலயம் மாத்திரமே காணப்பட்டது. இருப்பினும் வருடத்துக்கு ஒருமுறை பிரதேச மக்களினால் வழிபாடுகள் நடத்தப்படும். எனினும் கடந்த காலங்களில் ஆலயம் படிப்படியாக சேதமாக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்து வந்த நிலையில், திடீரென எல்ல பிரதேச சபை அதிகாரிகளினால் ஆலயத்தின் கொடிக்கம்பம் மற்றும் ஆலயத்தின் திருவுருவச்சிலை இருந்த இடங்கள் சேதமாக்கப்பட்டிருப்பது பிரதேச மக்களுக்கு பாரிய அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக மலையகத்தின் பாரம்பரிய சமய கலாசார இடங்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. நமது மலையக மக்களின் சமய, கலாசார உரிமைகளை பாதுகாக்க இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல எல்ல ஊவா கிரீன்லாந்து தோட்டத்தில் சின்ன சிவனொளிபாத மலைத்தொடரில் தோட்டத்தில் அமையப்பெற்றிருக்கும் 100 வருடங்களுக்கு மேல் பழமையான செந்தாகட்டி முருகன் ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆலயத்தை சேதமாக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.