புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுக்கு பொலிஸார் ஏற்படுத்தியிருந்த தடைகளைக் கண்டித்து, நேற்று (10) சட்டத்தரணிகள் உள்ளிட்டப் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன கோட்டைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தபோதிலும், அவ்வாறு அறிவிக்கவில்லை எனக்கூறி நேற்றையப் போராட்டப் பேரணிக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.
பொலிஸாரின் இச்செயற்பாடுகளுக்கு எதிராக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் முறைப்பாட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
மேலும், முறைப்பாட்டைப் பதிவு செய்ய சென்றிருந்த ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் கையடக்க தொலைபேசியை பறிக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முயற்சித்ததோடு தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தரிந்து தெரிவித்தார்.