அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் தொடர்பில்
நேற்று (21) நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ளாதவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவருகிறது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் – அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். முஷாரப், குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவர் மட்டுமே வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்ட ஒரேயொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் கூறப்படுகிறது.
22ஆவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், அவரின் வியாபாரம் தொடர்பாக துபாயில் தங்கிருந்தார் என, அவரின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பில் முக்கியமானதொரு திருத்தம் மேற்கொள்ளப்படும் வேளையில், அதனைக் பொருட்படுத்தாமல் – நாடாளுமன்ற உறுப்பினர் அவரின் சொந்த வியாபாரத்தில் ஈடுபடுவதற்காகவா மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என, சமூக ஊடகத்தில் விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
22ஆவது திருத்தத்தின் மூலம் – இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுவதால், அது பசில் ராஜபக்ஷவின் அரசியலை நேரடியாகப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், முன்னாள் அமைச்சர் பஷில் ரஜபக்ஷவின் விசுவாசி என்பதும், அவர் நாடாளுமன்றம் வருவதற்காக 20ஆவது திருத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றம் வருவதனை அனுமதிக்கும் விடயத்துக்கு ஆதரவாக முஷாரப் வாக்களித்திருந்தார் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.