“தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தல்களை அவசரப்பட்டு நடத்தி நாட்டுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. அதேவேளை, தோல்விப் பயத்தாலோ – அரசியல் இலாபம் கருதியோ அல்லது வேறு எந்தக் காரணங்களின் நிமித்தம் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய கபடநோக்கம் அரசுக்கு இல்லை.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘உரிய திகதி ஒன்றைத் தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ தற்போதைய அரசியல் முறைமையிலும், தேர்தல் முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் ஒவ்வொரு தேர்தல்களும் உரிய ஒழுங்கின் பிரகாரம் நடத்தப்படும்.
தற்போதைய உள்ளூராட்சி சபைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரைக்கும் இயங்கும் நிலையில் உள்ளன.
தேர்தல்கள் உடன் வேண்டும் என்று யாராவது நீதிமன்றம் சென்றால் அதை அரசு எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது” – என்றார்.