தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, இந்த நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே, பிணை வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி K.S.ரட்ணவேல் தெரிவித்தார்.
இந்த வழக்கின் சட்டத்தரணிகளாக கே.எஸ்.ரட்னவேல், சுரங்க பண்டார, ரனிதா ஞானராஜா மற்றும் சுவாதிக்கா ரவிச்சந்திரன் ஆகியோர் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்தனர்.