நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி
செய்யும் வகையில் அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, அதற்கான விசேட அனுமதியையும் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடான மருந்துகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை உணவுப் பொருட்கள், மருந்துகள் உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்விநியோக முகாமைத்துவம் தொடர்பிலும் தாமதமின்றி விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவில் ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உட்பட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் உள்ளடங்குவதுடன் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புக்களை மேற்கொண்டு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.