Our Feeds


Wednesday, October 26, 2022

ShortNews Admin

அதிகரிக்கும் மற்றுமோர் ஆபத்து - வெளியானது அதிர்ச்சி அறிக்கை.



குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார வறுமையை சமாளிக்கும் விதமாக குடும்பத்தின் பெண் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக 'இலங்கை சிக்கலான அவசர தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை' தெரிவிக்கின்றது.


"18 வயதுக்கு முன்னதாகவே பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் அபாயம் அதிகம் என அனைத்து குடும்பங்களிலும் 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்" என
ஆய்வுக் குழுவைச் சேர்ந்த சிங்ஹ விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.

"பணவீக்கத்தின் உச்ச நிலைமையை நாம் காண்கிறோம்" என கொழும்பில் கலந்துரையாடலின்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்ததாக, ப்ளூம்பெர்க் இணையத்தளம் ஒக்டோபர் 21 செய்தி வெளியிட்டது. அதாவது இலங்கையின் பணவீக்கம் 70%ஐ எட்டியுள்ளது.

இந்த மிகப்பெரிய பணவீக்கச் சூழல் மக்களின் நுகர்வு முறைகளை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான உதாரணத்தை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் பாதி குடும்பங்கள் விலை ஏற்றத்துடன் இறைச்சி மற்றும் மீன் உட்கொள்ளலை குறைத்துள்ளதுடன், 11 வீதமானோர் இறைச்சி உண்பதை முற்றாக நிறுத்தியுள்ளனர்.

உணவு, பானங்கள் மாத்திரமின்றி, பல்வேறு நோய்களுக்கு நீண்ட கால மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நோயாளிகள் தமது மருந்து வேளைகளின் எண்ணிக்கையை கூட குறைக்க வேண்டியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

58 வீதமான குடும்பங்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சிங்ஹா விக்ரமசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களில் 30 வீதமானவர்கள் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.

"மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதையும், போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதையும் கணக்கெடுப்பின் போது நாங்கள் கண்டறிந்தோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார். “பெரும்பாலும் அவர்கள் போக்குவரத்திற்கு அதிக செலவுகளைச் செய்கிறார்கள், ஆனால் வைத்தியசாலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைப்பதில்லை.” 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »