காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல்
மற்றும் சளி பாணி மருந்துகள், அங்குள்ள குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.இந்தநிலையில், புது டெல்லியை தளமாகக் கொண்ட மெய்டன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் அனைத்து மருந்து உற்பத்திகளையும் இடைநிறுத்தியுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"உலகின் மருந்தகம்" என்று அழைக்கப்படும் இந்தியா, அனைத்து பொதுவான மருந்துகளில் 45 சதவீதமானவற்றை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் அதன் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்து கடந்த நிதியாண்டில் மொத்த வருவாய் 24.5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.
இந்த நிலையில், மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 69 குழந்தைகள் மரணமான சம்பவம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மெய்டன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலையை இந்திய அதிகாரிகள் இந்த மாதம் நான்கு முறை ஆய்வு செய்தனர்.
அதன்போது, குறித்து நிறுவனம், உரிய விதிமுறைகளை மீறும் வகையில் தமது மருந்துகளை தயாரித்து சோதனை செய்ததைக் கண்டறிந்ததையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை அதன் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது அவதானிக்கப்பட்ட, முரண்பாடுகளின் தீவிரத்தன்மை மற்றும் உற்பத்தி செய்யப்படும் மருந்தின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு அதன் சாத்தியமான ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தாக மத்திய அரசு மற்றும் ஹரியானா மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தது.
எனினும், இது குறித்து மெய்டன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நரேஷ் குமார் கோயல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகள், ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள அதன் பிரதான தொழிற்சாலையில், நவம்பர், 2024 வரையிலான பயன்பாட்டுத் திகதியுடன் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே தொகுப்பாக மெய்டன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெயர் குறிப்பிட்ட மறுத்த ஒரு உயர் இந்திய சுகாதார அதிகாரி, அரசாங்கம் தவறுகளை பொறுத்துக்கொள்ளாது, ஆனால் காம்பியாவில் சரியாக என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று கூறினார்.
இந்தியாவில் சுகாதார விதிமுறைகள், குறிப்பாக மாநிலங்கள் மட்டத்தில், சில விமர்சகர்களின் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் ஆராய்ந்து பகுப்பாய்வு செய்தபின் அடுத்த நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கும் நான்கு நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
போலியான மருந்துகைள விற்றால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்திய சட்டங்கள் அனுமதிக்கின்றன.
ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுடன் இறப்புக்கு நேரடி தொடர்பை நிரூபிக்கும் எந்த அறிக்கையையும் உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அந்த தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் உதவி பணிப்பாளர் நாயகம் மரியங்கெலா சிமோ, மெய்டனின் இருமல் மற்றும் சளி பாணி மருந்துகள் குறித்து விசாரிக்க இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
மேற்படி நிறுவனத்தின் மருந்துகளுடன் தொடர்புடைய இறப்புகள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் முடிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளால் பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் பல மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் அமைந்ததாக அவர் கூறினார்.
Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய நான்கு மெய்டனின் தயாரிப்புகளின் ஆய்வகப் பகுப்பாய்வில், 'ஏற்றுக்கொள்ள முடியாத' அளவு டைஎதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் உள்ளது, அவை நச்சு மற்றும் ஈயமாக இருக்கலாம். அவை கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என U.N. சுகாதார முகவரம் தெரிவித்துள்ளது.
டைஎதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை சில மருந்து தயாரிப்புகளில் பல இருமல் மருந்துகளில் கரைப்பான் அல்லது கெட்டியாக்கும் மலிவான மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
செவ்வாய் கிழமையன்று காம்பியன் காவல்துறை வெளியிட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கைக்கு அமைய, கடுமையான சிறுநீரக பாதிப்பால் 69 குழந்தைகள் இறந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் அட்லாண்டாவை தளமாகக் கொண்ட அட்லாண்டிக் பார்மசூட்டிகல்ஸ் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
குறித்த இருமல் மருந்துகள் காம்பியாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறைசாரா சந்தைகள் மூலம் வேறு இடத்திற்குச் சென்றிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு காரணமான கடுமையான சிறுநீரக பாதிப்பு சம்பங்கள் குறித்து விசாரிப்பதாகக் அந்நாட்டு தகவல்கள் தெரிவித்தன. எனினும், அவை காம்பியாவில் உள்ள சம்பங்களுடன் ஒத்தவை அல்லவென தெரியவந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.