Our Feeds


Wednesday, October 26, 2022

ShortNews Admin

விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம், ஊழல் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது - விமலின் சட்டத்தரணி



முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று அவரது சட்டத்தரணி, கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (26) ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்தார்.


சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்துக்ககள் சேர்த்துள்ளமை தொடர்பிலேயே விமல் எம்.பிக்கு எதிராக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான  காலப்பகுதிக்குள்ளே சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று விமல் எம்.பிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகள் மாத்திரமே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும் என்று விமல் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மன்றில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் தனது சேவை பெறுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்குமாறு அவர் மன்றில் கோரிநின்றார்.

ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு திகதி வழங்குமாறும் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்குத் திகதியாக நவம்பர் 28ஐ நிர்ணயித்ததுடன், அன்றைய தினம் எழுத்துமூல ஆட்சேபனை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »