உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனை நாளை (11) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று (10) இம்மனு ஆராயப்பட்டபோது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக கால அவகாசம் கோரப்பட்டமையை அடுத்து மனுவை நாளை பரிசீலனை செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு இதற்கான தீர்மானத்தை அறிவித்தது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கின் சந்தேக நபராக தமது பெயரை குறிப்பிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து, கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நீதிவானின் கட்டளையை வலுவிழக்க செய்யுமாறே மைத்திரிபால சிறிசேன மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.