உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கின், ‘முன் விளக்க மாநாடு ‘ ( pre trial conference) நேற்று ( 03) ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் முன்னிலையில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைவிட 25 பிரதிவாதிகளுக்காகவும், அவர்களது சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள பிணைக் கோரிக்கை குறித்த எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு, சட்ட மா அதிபர் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை நேற்று முன்வைத்தார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர பிணைக் கோரிக்கைக்கு எதிரான வாதங்களை இவ்வாறு எழுத்துப் மூலம் முன்வைத்தார்.
எனினும் அந்த எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு மேலதிக எதிர்வாதங்களை அல்லது விளக்கங்களை முன்வைக்க சந்தர்ப்பமளிக்க வேண்டும் என பிரதிவாதிகளுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், எம்.என். சஹீட் உள்ளிட்டோர் முன்வைத்த கோரிக்கையை சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி அதற்கான சந்தர்ப்பத்தையும் அளித்து, பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 24 இல் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 25 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் நேற்று ( 3) விசாரணைக்கு வந்தது.
இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையிலேயே இந்த வழக்கு இவ்வாறு விசாரணைக்கு வந்தது.
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள்நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாள்ர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
நேற்றைய தினம் மன்றில்,7,8,11,12,17,18,19,20,21 ஆம் பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆஜரானார். 9 ஆம் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனும், 13 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி ஜி.கே. கருனாசேகரவும், 22,23,24 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி விஜித்தாநந்த மடவலகமவும், 25 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி சுரங்க பெரேராவும் ஆஜராகினர். 3 அம் பிரதிவாதி மில்ஹானுக்காகவும் நேற்று சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.
முதல் பிரதிவாதி நெளபர் மெளலவி மற்றும் 10 ஆவது பிரதிவாதிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் 2,14 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் ஹுசைனும், 4,15 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணி அசார் முஸ்தபாவும், 5,16 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபும், 6 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்கவும் ஆஜராகினர்.
நேற்றைய தினம் இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று வழக்கின் முன் விளக்க மாநாடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வழக்குத் தொடுநரால் முன்மொழியப்பட்ட ஏற்புகள் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த பின்னர் அடுத்த தவணையின்போது இணங்க முடியுமான ஏற்புகள் தொடர்பில் மன்றுக்கு எழுத்துமூலம் அறிவிக்க நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்பினருக்கு உத்தரவிட்டது.
இதனைவிட, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபரால், சான்று பொருட்களாக இறுவட்டொன்றும், பென் ட்ரய்வ் ஒன்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாட்சிகள் விசேட கட்டளைச் சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம், கணினி சாட்சிகளை ஆராய்வதனை மையப்படுத்தி அவை கையளிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே, வழக்கானது மேலதிக முன் விளக்க மாநாடு மற்றும் பிணை குறித்த தீர்மானத்துக்காக எதிர்வரும் நவம்பர் 24 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி
2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப்
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்