நாட்டின் ஒரு பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய கல்வி வாய்ப்புகள்
இருந்த போதிலும், தூர மாகாணங்களில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது எனவும்,இதன் விளைவாக பல தலைமுறைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்,ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட,தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிக் கல்வியை மையமாகக் கொண்ட கல்வி முறையைப் போலவே,கணினி ஆய்வகங்கள்,செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன முறைகள் இலங்கையிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்,இதன் மூலம் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் கீழ் 37 ஆவது கட்டமாக மற்றுமொரு பஸ் வண்டி,இரத்தினபுரி கொலன்ன தேசியப் பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தியதால் மக்கள் போராட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி,ஆங்கில மொழி அடிப்படையிலான கல்வி முறையை உருவாக்குவது போன்ற பாராட்டப்பட வேண்டிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முயற்சித்த போதும்,அதே அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும்,குறித்த அமைச்சரின் பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளிலும் வெளிநாடுகளிலும் பயின்று வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் பாகுபாட்டுப் பிரிவினையை உருவாக்கும் கல்விதான் நம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நாட்டுக் கல்வி முறையின் காரணமாக,தொழிற்சந்தையில் கூட பாகுபாடு ரீதியான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்,அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சமகால தலைமுறை,அடுத்த தலைமுறை என பாடசாலை குழந்தைகளும் இதனால் செய்வதறியாது தவிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
எனவே,கல்வித்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவும்,பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும் விசேட சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கிலான ஆட்சியால் பாடசாலை குழந்தை முதல் விவசாயி,அரச ஊழியர் வரை சகலரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தால் அவர்கள் மேலும் சிரமங்களுக்குள்ளாகுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.