Our Feeds


Saturday, October 29, 2022

Anonymous

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் - அமைச்சர் பிரசன்ன விடுத்த அதிரடி உத்தரவு.

 



மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து ‘விழிப்புக் குழுக்களை’ அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (28) கம்பஹா மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.


பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து செயற்படும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.


மேல்மாகாண சபையின் முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க இருந்த காலப்பகுதியில், மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இன்று (28) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


அத்துடன் அண்மையில் பெய்த மழையினால் கம்பஹா மாவட்டத்தில் பெருமளவிலான தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ சத்யானந்தவுக்கு அறிவுரை வழங்கினார்.


வெள்ளத்தால் தடைப்படும் கால்வாய்களை சுத்தப்படுத்த குறுகிய கால வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பல கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கான குறுகிய கால வேலைத்திட்டங்களின் கீழ், மாவட்ட செயலாளரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இதன்படி கம்பஹா மாவட்டத்தில் ஜாரு கால்வாய், களுகொடுவ கால்வாய், குந்தி கால்வாய், களுகொல ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் மற்றும் பல்லேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


அனைத்து பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் கல்விக் குழுக்களை விரைவில் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »