ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலை
கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து 11 மாவட்டங்களில் 2,871 வீடுகளையும் தோட்டத் துறையில் 300 வீடுகளையும் உள்ளடக்கி ‘இலங்கை சிக்கலான அவசர தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை’க்காக (The Sri Lanka Complex Emergency Needs Assessment Report)ஆய்வினை முன்னெடுத்தன. ஆய்வாளர்கள் கவனம் செலுத்திய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினர்.
“ஏற்கனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள எத்தனை பாதிக்கப்படக்கூடிய மக்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அறிக்கை நேரடி ஆதாரங்களை வழங்குகிறது, இதன் விளைவாக பெரியளவில் கடன் வாங்குதல், குறைவான வேளைகள் மற்றும் குறைவான உணவை உண்ணுதல், அடமானக் கடன்களை பெறுதல்.” போன்ற விடயங்கள் இடம்பெறுவதாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் அலெக்சாண்டர் மெத்யூ தெரிவித்துள்ளார்.
அண்மைய அதிர்ச்சியூட்டும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை காட்டுவது போல், இலங்கை மக்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகக்கு அனுப்புவதற்கும், மருந்துகளை வாங்குவதற்கும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்ற கடினமான தீர்மானத்தை இலங்கை மக்கள் எடுக்க வேண்டியுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை சிறுவர்கள் சுமக்க வேண்டியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிப்படுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வெளியிடப்பட்டுள்ளது.
“நம்பிக்கையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தின் இதயத்தை பிளக்கும் கதைகளை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். பிள்ளைகளுடன் தனிமையில் இருக்கும் தாய்மார்கள், ஊனமுற்றோர், முதியவர்கள், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டம் தோல்வியுற்ற போராகும்” என இலங்கை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் மகேஷ் குணசேகர தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள 10 தோட்டங்களில் உள்ள 300 வீடுகளை ஆய்வு செய்ததில், அதில் 96% குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உணவு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் வழங்குவதில் இக்குடும்பங்கள் எதிர்நோக்கும் சிரமங்களே பொருளாதார நெருக்கடியினால் உருவாகியுள்ள மூன்று முக்கிய தேவைகள் என இனங்காணப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விலையேற்றம், சில பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு நிறுத்தம் போன்ற காரணங்களால் தமது பிள்ளைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
செஞ்சிலுவைச் சங்க அறிக்கைக்கு அமைய, ஏழு வீடுகளில் ஒரு வீட்டின் சிறுவர்கள் ஏற்கனவே பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலதிகமாக, இந்த இக்கட்டான நிலை மோசமடைந்தால் 10 குடும்பங்களில் ஒருவர் தமது பிள்ளைகள் பாடசாலை கல்வியை தவறவிடுவார்கள் என ஒப்புக்கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் கூற்றுக்கு அமைய, 4.1 மில்லியன் பாடசாலை செல்லும் மாணவர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் 11 இலட்சம் பள்ளி மாணவர்கள் மாத்திரமே மதிய உணவைப் பெறுகிறார்கள்.
ஒரு பாடசாலை பிள்ளையின் உணவிற்காக 60 ரூபாய் செலவிடப்படுகின்றது. உணவு பொதுவாக சோறு, முட்டை அல்லது நெத்தலி காய்கறிகள் மற்றும் கீரையை கொண்டிருக்கும்.
“வைத்திய ஆலோசனையின் அடிப்படையில் மாணவர்களின் உணவில் தேவையான சகல சத்துக்களும் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்கிறோம்” என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா, சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.
“60 ரூபாயில் இந்த உணவை வழங்க முடியாது. எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து உணவு வழங்கி வருகின்றனர்.”
பாடசாலை வருகையை பேணுவதற்காக மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு உணவு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு பிள்ளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை முட்டை ஒன்றின் விலை அளவிற்கு றைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முதன்மையான கல்வி நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“முட்டை ஒன்றின் விலை 60 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அந்த விலையில் சிறுவர்களுக்கு சத்தான உணவை வழங்க முடியாத சூழ்நிலையில், சத்துணவு விநியோகஸ்தர்களுக்கும், பாடசாலைகளுக்கும் இடையே உடன்பாடு இல்லாமையால், மதிய உணவு திட்டம் கடும் நெருக்கடியில் காணப்படுகின்றது.” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘இலங்கை சிக்கலான அவசர தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை’ மற்றுமொரு பாரதூரமான சமூகப் பிரச்சினையை நாட்டின் முன் முன்வைக்கிறது. அது குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார வறுமையை சமாளிக்கும் விதமாக குடும்பத்தின் பெண்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நிலை மேம்படவில்லை எனின், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் அவர்களது குடும்பங்கள் இளம் வயது திருமணத்தை கருத்தில் கொள்ளுமா என பதிலளித்தவர்களிடம் கேட்கப்பட்டது.
“18 வயதுக்கு முன்னதாகவே பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் அபாயம் அதிகம் என அனைத்து குடும்பங்களிலும் 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்” என
ஆய்வுக் குழுவைச் சேர்ந்த சிங்ஹ விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
“பணவீக்கத்தின் உச்ச நிலைமையை நாம் காண்கிறோம்.” என கொழும்பில் கலந்துரையாடலின்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்ததாக, ப்ளூம்பெர்க் இணையத்தளம் ஒக்டோபர் 21 செய்தி வெளியிட்டது. அதாவது இலங்கையின் பணவீக்கம் 70%ஐ எட்டியுள்ளது.
இந்த மிகப்பெரிய பணவீக்கச் சூழல் மக்களின் நுகர்வு முறைகளை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான உதாரணத்தை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் பாதி குடும்பங்கள் விலை ஏற்றத்துடன் இறைச்சி மற்றும் மீன் உட்கொள்ளலை குறைத்துள்ளதுடன், 11 வீதமானோர் இறைச்சி உண்பதை முற்றாக நிறுத்தியுள்ளனர்.
உணவு, பானங்கள் மாத்திரமின்றி, பல்வேறு நோய்களுக்கு நீண்ட கால மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நோயாளிகள் தமது மருந்து வேளைகளின் எண்ணிக்கையை கூட குறைக்க வேண்டியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
58 வீதமான குடும்பங்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சிங்ஹா விக்ரமசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களில் 30 வீதமானவர்கள் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
“மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதையும், போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதையும் கணக்கெடுப்பின் போது நாங்கள் கண்டறிந்தோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். “பெரும்பாலும் அவர்கள் போக்குவரத்திற்கு அதிக செலவுகளைச் செய்கிறார்கள், ஆனால் வைத்தியசாலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைப்பதில்லை.”