நாடு என்ற வகையில் அனைந்து தரப்பினருக்கும் அரசியல் என்பது வேண்டாத ஒரு விடயமாக சமகாலத்தில் மாறியுள்ளதாக சிறி லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டம் பத்தேகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
14 நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள்.
ஆனால் அதில் 8 பேர் அரசாங்கத்தில் சில அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்கொண்டு கட்சியின் தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்ட சூழ்நிலையில், விலக்கப்பட்டுள்ளனர்.
வௌியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கட்சியின் முக்கிய தூண்கள் கட்சியை விட்டு வௌியேறிச் சென்று விட்டதாகவே தோன்றும்.
மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வேலை செய்ய வேண்டும் என்றால் அதிகாரம் தேவையில்லை. ஒருவர் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அதிகாரம் தேவையில்லை.
எங்களது கட்சி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், அதிக காலம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளது.
கட்சியிலேயே உருவாகி, கட்சியிலேயே தலைமைத்துவதற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியை இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டு சென்றார்.
எனினும், சிறிலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் நாங்கள் எங்களின் பலத்தை உறுதி செய்து கொண்டு முன்னோக்கிச் சென்றோம்.
அதேபோன்று, இந்த கட்சியில் இருந்து வௌியேறிய இன்னும் சிலர் வேறு கட்சியொன்றை உருவாக்கிக் கொண்டு சென்றுள்ளார்கள்.
எது எவ்வாறாயினும், எமது கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.