மதகுருமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளும் இணையத்தில் ஆபாசப் பாலியல் படங்களை பார்வையிடுவதாக பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் கூறியுள்ளதுடன் இது இதயங்களை பலவீனமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வத்திகானில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மதகுருக்கள் மற்றும் பாதிரியார்கள், குருமட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு 86 வயதான புனித பாப்பரசர் பிரான்சிஸ் இந்நிகழ்வில் பதிலளித்தார்.
இதன்போது, கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை பகிர்வதில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என பாப்பரசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அக்கேள்வி பாப்பரசர் பதிலளிக்கையில், வெறித்தனமாக செய்திகளை பார்வையிடுவது, ஒருவரின் வேலையிலிருந்து கவனத்தை சிதறச் செய்யும் வகையில் இசையை கேட்பது குறித்து எச்சரித்தார்.
அதன்பின், “மற்றொரு விடயமும் உள்ளது. நீங்கள் அதை நன்றாக அறிவீர்கள்: டிஜிட்டல் ஆபாசப்பாலியல் படங்கள்.
நீங்கள் டிஜிட்டல் ஆபாசப் பாலியல் படங்கள் குறித்த அனுபவத்தை அல்லது தூண்டுதல்களை கொண்டிருப்பீர்களாயின் என எண்ணிப்பாருங்கள். அதிக எண்ணிக்கையான மக்கள், அதிக எண்ணிக்கையான சாதாரண ஆண்கள், அதிக எண்ணிக்கையான சாதாரணப் பெண்கள், ஏன் மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள்கூட அதை கொண்டிருப்பது ஒரு களங்கமாகும்.
அன்பான சகோதரர்களே இது குறித்து கவனமாக இருங்கள். தூய்மையான இதயம், இயேசுவை தினமும் வரவேற்கும் இதயம், பாலியல் பட தகவல்களை பெற முடியாது” எனக் கூறிய பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், “உங்கள் செல்போன்களிலிருந்து அவற்றை அழித்து விடுங்கள், அப்போது நீங்கள் தூண்டப்பட மாட்டீர்கள்” எனவும் கூறினார்.
‘பிசாசு அதன் வழியாக உள்வருகிறது. அது ஆசாரிய இதயத்தை பலவீனமாக்குகிறது.
பாலியல் படங்கள் குறித்து இந்தளவு விடயங்கள் பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால், பாதிரியார்கள், பாதிரியார் பயிற்சி நிலையத்தினர், கன்னியாஸ்திரிகள் புனிதமாக்கப்பட்ட இதயங்கள் தொடர்பான யதார்த்தம் ஒன்றுள்ளது’ என பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் மேலும் கூறினார்.