ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைத் தூதுவராக ஹிமாலி அருனதிலக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
இவர், தற்போது இலங்கைக்கான நேபாள தூதுவராக கடமையாற்றுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட சீ.ஏ.சந்திரபெரும, நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்தே இவர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சீனாவுக்கான இலங்கை தூதுவராக ஒய்வுபெற்ற இராஜதந்திரி எசேல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நேபாளத்தின் காத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்தின் செயலாளர் நாயகமாக பணியாற்றும் இவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
இவரின் பெயர் முன்மொழிவினை அடுத்து, சீனாவிற்கான இலங்கைத் தூதுவராக தற்போது கடமையாற்றும் பாலித கோஹன நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக கடமையாற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் சித்ராங்கேணி வாகேஸ்வரவும், பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவராக மனிஷா குணசேகரவும் நியமிக்கப்படள்ளமை குறிப்பிடத்தக்கது.