மஹரகம நகரில் காணாமல்போன மோட்டார்
சைக்கிளை பயன்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் கொஹுவல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், மஹரகம சந்தைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயிருந்தமை தொடர்பில் மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கொஹுவல பிரதேசத்தில் ஒருவர் காணாமல் போன மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்வதை முறைப்பாட்டாளர் கண்டுள்ளதுடன், மஹரகம பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் பிரகாரம், மஹரகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொஹுவல பொலிஸாருக்கு அறிவித்து, உடனடியாக கைப்பற்றியதுடன் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளையும் கைது செய்துள்ளனர்.