உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனைகள் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டன.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் பரிசீலனைகள் இவ்வாறு ஆரம்பமாகின.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக, சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், கீர்த்தி திலகரத்ன, அஷான் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகிய நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மனுதாரர் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
இன்றைய தினம் குறித்த ரிட் மனு ஆராயப்பட்டபோது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன பிரசன்னமானார்.
இன்றைய மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், நாளை (12) பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன ஆகியோர் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.