உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும் மதத் தலங்களை மையமாகக் கொண்டு உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாதத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் இணைய வழியாக இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் தலைமையில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மதத் தலங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உணவுப் பரிமாற்ற மையங்கள், பிரதேசவாசிகளினால் உணவை அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவு வங்கிகளுக்கு எடுத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள உணவுப் பற்றாக்குறை உள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்கின்றன. மேலும், இந்த உணவுப் பரிமாற்ற மையங்கள் மூலம், அவர்கள் தங்கள் உணவை மற்ற பிரதேசவாசிகளுக்கு பரிமாறிக்கொள்ளவும், அதன் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகின்றது.
பௌத்த மத குருமார்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் தமது பிரதேச மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளமையினால், இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய குருமார்களின் பங்களிப்பைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். அரசு, பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் மற்றும் அவற்றின் மேம்பாட்டுத் திட்டம் எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.