ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஸ்காட்லாந்து யாட் பொலிஸாரை அழைத்து விசாரணை நடத்தப் போவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும், இதுவரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
“தற்போதைய ஜனாதிபதி, பின் வாசல் வழியாக வந்தவர். அதனால் ஜனாதிபதி பதவியை அவர் வகிப்பதற்கு மக்களின் சம்மதம் கிடையாது”.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தாக்குதலின் பின்னணியில் அரசியல் கை இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ஸ்காட்லாந்து யாட் பொலிஸாரை அழைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.
அதுமட்டுமின்றி, அரசியல் பேசுவதாகவும் என்னை விமர்சிக்கின்றனர்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாகக் கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கோரியுள்ளார்.
நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ஆராதனையின் போது உரையாற்றிய போதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.