Our Feeds


Monday, October 31, 2022

SHAHNI RAMEES

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகலை ஏற்படுத்தியுள்ள ‘ஜீவன்’! - கடுப்பில் ராதா!!

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் பங்கேற்றதை பலரும் வரவேற்று, “மலையக அரசியலில் இது புதிய திருப்பம்…” என பாராட்டிவரும் நிலையில், முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பீடத்துக்கு அறிவிக்காமல் – அனுமதி பெறாமல், இ.தொ.காவினருக்கு அழைப்பு விடுத்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தன்னிச்சையான முடிவு, ‘கூட்டணி ஒன்றுமை’க்கு ஆரோக்கியமானதல்ல என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார் என தெரியவருகின்றது.

தலைமையக திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து கூட்டணிக்குள் முன்கூட்டியே கலந்துரையாடப்பட்ட நிலையில், இ.தொ.காவினரை அழைப்பது குறித்து ஏன் அறிவிக்கப்படவில்லை எனவும் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

” திறப்பு விழாவுக்கு காங்கிரஸை அழைப்பது பிரச்சினை இல்லை, ஆனால் பொது விடயங்களின்போது கூட்டணிக்குள் தன்னிச்சையான முடிவு ஏற்புடையது அல்ல. இது தொடர்பில் உரிய தரப்புகளிடம் விளக்கம் கோரப்படும்.” – என ராதாகிருஷ்ணன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழா ஹட்டனில் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழா முடிவும்வரை ராதாகிருஷ்ணன் மேடையில் இருக்கவில்லை. ஆலய நிகழ்வு எனக்கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »