இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளன.இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் திணைக்களம் இந்த நுளம்புகளை அடையாளம் கண்டுள்ளது.
கலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus) மற்றும் கலெக்ஸ் நியாய்ன்ஃபுலா (Culex niyainfula) ஆகிய நுளம்பு இனங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுவாக தாய்லாந்து மற்றும் இந்தியாவில் காணப்படும் கலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus) இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்த நுளம்பு இனம் உலகம் முழுவதிலும் எந்தவொரு நோயையும் பரப்பும் காரணியாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை என திஸாநாயக்க கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கலெக்ஸ் நியாய்ன்ஃபுலா (Culex niyainfula) பெருமூளை மலேரியா நோயைக் கடத்துபவை என்று அறியப்படுகிறது.
புதிய நுளம்பு இனம் – இலங்கையின் பல்லுயிரியலில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பரவல் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் திஸாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையில் கண்டறியப்பட்ட மேலும் 4 நுளம்பு வகைகளை அடையாளம் காண்பதற்காக, அவற்றின் மாதிரிகள் கொரிய பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.