மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முனைத்தீவு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானையின் தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (17) அதிகாலை 2.30மணியளவில் முனைத்தீவு கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரை தாக்கி கொன்றுள்ளது.
முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 69வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காட்டுயானை வீட்டின் பகுதிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் காட்டு யானையின் அச்சுறுத்தல் காரணமாக அதிகாலை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்;டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பகுதியின் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த யானைகள் இன்று மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்குள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.