சீனாவிற்கு சொந்தமான கப்பலொன்று நாளைய தினம் (ஒக்.19) அல்லது நாளை மறுதினம் (ஒக்.20) நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையாகி, நீரில் மூழ்கியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை எடுக்கும் நோக்கில் இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சில மாதங்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷினி லந்தபுர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 1700 மெற்றிக் தொன்னிற்கும் அதிகமான கழிவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டு, நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் தொடர்பிலான இரசாயண பகுப்பாய்வு நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர், குறித்த பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.